மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் 199 குளம்-கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி கலெக்டர் அறிவிப்பு

மாவட்டம் முழுவதும் 199 குளங்கள் மற்றும் கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.

வண்டல் மண்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள குளங்கள், கண்மாய்கள் தென்மேற்கு பருவமழைக்கு முன்பு தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் 199 குளங்கள் மற்றும் கண்மாய் களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு அரசிதழில் வெளியிடப்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள குளம் அல்லது கண்மாயில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 10 டிராக்டர்கள் அல்லது 5 லாரிகளில் மண் எடுக்கலாம்.

அனுமதி பெற விண்ணப்பம்

அதேநேரம் 3 அடி ஆழத்துக்கு மிகாமல் மண் எடுக்க வேண்டும். மேலும் வண்டல் மண்ணை எடுக்கும் போது எந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் ஒரு விவசாயி 3 முதல் 7 நாட்களில் வரையறுக்கப்பட்ட அளவு மண் எடுத்து கொள்ளலாம். இதற்காக விண்ணப்ப படிவம், பட்டா, சிட்டா, புலப்படச்சுவடி, அடங்கல் ஆகியவற்றுடன் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம், பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

மேலும் குளத்தில் வண்டல் மண் எடுத்த விவசாயிகளுக்கு மீண்டும் மண் தேவைப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து அனுமதி பெறலாம். விவசாய பயிர்களுக்கு இயற்கையான சத்துக்களை அதிகமாக தரக்கூடிய வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேநேரம் இதனை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.