மாவட்ட செய்திகள்

தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் போலீசார் தடியடி

செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் போலீசார் தடியடி

சோழிங்கநல்லூர்,

செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வீஸ் சாலையில் நின்ற மாணவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கல்லூரியின் நிர்வாக இயக்குனராக ஜெயக்குமார் கிருஸ்துராஜனை நியமிக்க வேண்டியும், தேர்வுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 நாட்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் தங்களுக்கு 4 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள், கல்லூரி நுழைவு வாயில் அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைக்கு வந்து போராட்டம் செய்ய வேண்டாம். உங்கள் கோரிக்கைகளை நிர்வாக தரப்பில் பேசி தீர்க்கலாம். கலைந்து செல்லுங்கள் என்றனர்.

ஆனால் மாணவர்கள் அதை ஏற்காமல் நுழைவு வாயில் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஒன்று திரண்டனர். இதையடுத்து சர்வீஸ் சாலையில் நின்ற மாணவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதைதொடர்ந்து மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.