திருப்பூர்,
2017-2018, 2018-2019 ஆகிய கல்வியாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படித்து, தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் படித்து வந்தால் அதற்கான சான்றிதழை அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்று பள்ளிகளில் வழங்கி மாணவர்கள் மடிக்கணினி பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு சான்றிதழ் வழங்கி இருக்கும் மாணவர்கள் மடிக்கணினி பெற இன்று (நேற்று) கடைசி நாளாகும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (தொழிற்கல்வி) சுகன்யா அறிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவிகள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தலைமையாசிரியை ஸ்டெல்லாவிடம், தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கேட்டனர். அப்போது அவர்களிடம் பேசிய தலைமையாசிரியை உங்களுக்கான மடிக்கணினிகள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம். அப்போது நீங்கள் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றார்.
அதை ஏற்காத மாணவிகள் பள்ளியின் நுழைவு வாயிலுக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவிகளை பள்ளி வளாகத்துக்குள் சென்று அமரும்படி கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாணவிகள் பள்ளி வளாகத்துக்கு உள்ளே சென்று அமர்ந்தனர். மீண்டும் அவர்களிடம் பேசிய தலைமையாசிரியை, நீங்கள் கல்லூரிகளில் இருந்து பெற்று வந்துள்ள சான்றிதழை அலுவலகத்தில் கொடுத்து விட்டு செல்லுங்கள். மடிக்கணினி வந்தவுடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார். உடனே அங்கிருந்து எழுந்த மாணவிகள் நேராக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
இதே போல் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018, 2018-2019 கல்வியாண்டில் படித்த மாணவிகள் மடிக்கணினி கேட்டு பள்ளியில் திரண்டனர். அவர்களிடம் பேசிய ஆசிரியர்கள், 2017-2018-ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு வழங்க மடிக்கணினி இன்னும் வரவில்லை. வந்தவுடன் வழங்குவோம். எனவே இப்போது கலைந்து செல்லுங்கள் என்றனர்.
மேலும் 2018-2019-ம் கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க எங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. இப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் பள்ளிக்கு வர உள்ளார். அவர் வந்து உங்களிடம் பேசுவார் என்றனர். அதை ஏற்காத மாணவிகள் கலெக்டரை பார்த்து பேசப்போவதாக கூறிவிட்டு பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பழனியம்மாள் பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றதை அறிந்து அவரும் அங்கு சென்றார். கலெக்டர் அலுவலகத்துக்கு முன்புறம் நுழைவுவாயில் அருகே கூடி இருந்த ஜெய்வாபாய் மற்றும் பழனியம்மாள் பள்ளிகளை சேர்ந்த மாணவிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவிகள் 5 பேர் கலெக்டரை சந்திக்க அனுமதி கேட்டனர்.
அதைத்தொடர்ந்து, அவர்களிடம் பேசிய கலெக்டர் விஜயகார்த்திகேயன் உங்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்கிறேன். எனவே நீங்கள் உடனடியாக பள்ளிக்கு செல்லுங்கள் என்றார். இந்த பேச்சுவார்த்தையில் குணசேகரன் எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டார்.
அங்கிருந்து புறப்பட்ட பழனியம்மாள் பள்ளி மாணவிகள் நேராக தங்கள் பள்ளிக்கு சென்றனர். கலெக்டரின் உத்தரவின்படி 2018-2019-ம் ஆண்டில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு அவர்களிடமிருந்து கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
கல்லூரியில் படிக்காமல் மதரசா பள்ளியில் உருது படித்து வரும் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இதனால் அந்த மாணவிகள் பள்ளிமுன்பு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாணவிகள் மறியலில் ஈடுபட்டதால் கே.எஸ்.சி. பள்ளி ரோட்டில் இருந்து பெரியபள்ளிவாசல் வழியாக காங்கேயம்ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காங்கேயம் ரோட்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் ரோட்டுக்கு வரும் வாகனங்கள் நடுவழியில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன் ஆகியோர் பள்ளிக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேசும் போது, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவிகள் அரசாணையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டனர். அதைத்தொடர்ந்து அனைத்து மாணவிகளுக்கும் அரசாணையின் நகல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காலை 10 மணிக்கு தொடங்கிய பரபரப்பு இரவு 7 மணிக்கு முடிவுக்கு வந்தது.