மாவட்ட செய்திகள்

எல்லமலை திருவள்ளுவர் நகர் சாலையை சீரமைத்த பொதுமக்கள்

எல்லமலை திருவள்ளுவர் நகர் சாலையை சீரமைத்த பொதுமக்கள்

கூடலூர்

கூடலூர் தாலுகாவில் புதர்கள் நிறைந்து காணப்பட்ட எல்லமலை- திருவள்ளுவர் நகர் சாலையை கிராம மக்கள் சீரமைத்தனர்.

புதர்கள் நிறைந்த மண் சாலை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப் பிரிவு 17 -ன் கீழ் உள்ள நிலம் உள்ளதால் வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் மட்டும் காணப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலான இடங்களில் மண் சாலையாக உள்ளது. இந்த நிலையில் எல்லமலையில் இருந்து திருவள்ளுவர் நகருக்கு மண் சாலை செல்கிறது.

கடந்த 6 மாதங்களாக பருவமழை பெய்ததால் மண் சாலை சேரும் சகதியுமாக காணப்பட்டது. தொடர்ந்து புதர்கள் நிறைந்து இருந்தது. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து சென்று வந்தனர். இந்த நிலையில் பருவமழை முடிவடைந்து பனிப்பொழிவு காலம் தொடங்கி உள்ளது.

கிராம மக்கள் சீரமைத்தனர்

மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு புதர்கள் நிறைந்த மண் சாலையை கிராம மக்கள் சீரமைத்தனர். மேலும் வாகனங்கள் செல்லும் வகையில் சாலையை அகலப்படுத்தினர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

சட்டப்பிரிவு- 17 ன் கீழ் உள்ள நிலம் என்பதால் அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வனவிலங்குகள் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு சிரமங்களுக்கிடையே குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மண் சாலையின் இருபுறமும் தூதர்கள் படர்ந்து இருப்பது அகற்றப்பட்டது. தொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.