மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சன்னதி தெரு, துராபலி தெரு, கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சன்னதி தெருவில் திடீரெனக் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகப் பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.