மும்பை,
கரிரோடு, பரேல் ரெயில் நிலையங்களில் நடைமேம்பால இரும்பு சட்டம் பொருத்தும் பணி காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கூட்ட நெரிசல்
மும்பை கரிரோடு மற்றும் பரேல் ரெயில் நிலைய நடைமேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று நடைமேம்பாலத்திற்காக ராட்சத இரும்பு சட்டங்கள் பொருத்தும் பணி நடந்தது. இதன் காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று காலை முதல் மாலை வரை தாதர் வரை மட்டுமே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் குறைந்த அளவு ரெயில் சேவைகளே இயக்கப்பட்டன. இதேபோல ரெயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டன.
எனவே ரெயில்நிலையங்களில் பயணிகள் அதிகளவு குவிந்தனர். ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக குடும்பத்தினருடன் வந்தவர்கள் மின்சார ரெயில்களில் ஏறமுடியாமல் தவித்தனர். தாதரில் பிளாட்பாரங்கள் நிரம்பியதால் பொதுமக்கள் நடைமேம்பாலங்களில் ஏறி நின்றனர்.
தண்டவாள விரிசல்
இதேபோல மேற்கு ரெயில்வேயில் நேற்று காலை 7.15 மணியளவில் உம்ரோலி ரெயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் கண்டறியப்பட்டது. இதனால் மேற்கு ரெயில்வேயில் மும்பை நோக்கி வந்த மின்சார ரெயில்கள் சுமார் 25 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
ஒரே நாளில் மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில்சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.