மாவட்ட செய்திகள்

ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

உத்தமபாளையம்,

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரமலான் மாதம் முஸ்லிம்களுக்கு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி கடந்த ஒரு மாத காலமாக முஸ்லிம்கள் நோன்பு இருந்தனர்.

புனித நோன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்கு முன்பாக முஸ்லிம்கள் ஊர்வலம் சென்றனர்.

தேனியில் பழைய பள்ளிவாசல் மற்றும் புதிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதற்காக அல்லிநகரம் பள்ளிவாசலில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பெரியகுளம் சாலை வழியாக பழைய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு பள்ளிவாசல் தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார்.

இதேபோல் பங்களாமேட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புதிய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு புதிய பள்ளிவாசல் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை தொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது.

இதேபோல் கம்பம் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வாவேர் பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஜமாத் தலைவர் பாபா முகமது பக்ருதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர்.

பின்னர் அங்கு கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் மிஸ்பாஹி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. கம்பம் பாரஸ்ட் சாலை, எல்.எப். மெயின்ரோடு, கம்பம்மெட்டு சாலை, சுங்கம் தெரு வழியாக வாவேர் பள்ளி வாசலில் ஊர்வலம் நிறைவடைந்தது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுப் பள்ளிவாசல், வாவேர் பள்ளி தெரு, கம்பம்மெட்டு காலனி, மைதீன் ஆண்டவர் பள்ளி, தாத்தப்பன்குளம், ஓடைக்கரைதெரு உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி உத்தமபாளையத்தில் ஊாவலம் நடந்தது. தேரடி, மெயின்பஜார், கிராமசாவடி, பைபாஸ் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புதொழுகை நடந்தது.

தொழுகையை பெரியபள்ளிவாசல் இமாம் மதார்மைதீன் உலவி நடத்தினார். இந்திய நாடு வளமிக்க நாடாகவும், உலகில் வலிமைமிக்க நாடாகவும், வேற்றுமையில் ஒற்றுமை மிக்க சமுதாயங்களை கொண்ட நாடாகவும் மாறவேண்டும், நல்லிணக்கம் மலர வேண்டும் என கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு மீண்டும் ஊர்வலமாக வந்த முஸ்லிம்கள், தங்களின் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் உத்தமபாளையம் பெரியபள்ளிவாசலில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். இதேபோல் கோட்டைமேடு, களிமேடு, ஷாபிஈ, பி.டி.ஆர்.காலனி, தேவாரம், டி.மீனாட்சிபுரம், திம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதேபோல் தேவாரம் பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய ரமலான் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பீர்அவுலியா தர்கா, மைதானத்துக்கு சென்றது. பின்னர் அங்கு சிறப்பு தொழுகை நடந்தது.

பெரியகுளத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள ஈகை மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரியகுளம் வடகரையில் உள்ள நவாப் ஜாமிஆ பள்ளிவாசல், தென்கரை வாகம்புளி பள்ளிவாசல், கோட்டைமேடு பள்ளிவாசல், தண்டுபாளையம் பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல், காயிதே மில்லத் நகர் மதினா பள்ளிவாசல், முகையதீன் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இருந்து முஸ்லிம்கள் தொழுகை நடைபெற்ற ஈகை மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதற்கு வடகரை நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு தொழுகையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் இமாம்கள், தலைவர்கள், நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து வந்து, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...