மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

ராணிப்பேட்டை பகுதியில் மழைநீருடன் தோல் தொழிற்சாலையிலிருந்து திறந்து விடப்பட்ட கழிவுநீரும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழைநீருடன் தோல் தொழிற்சாலையிலிருந்து திறந்து விடப்பட்ட கழிவுநீரும் மழைநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அக்னிநட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது மாலை நேரங்களில் மழையும் பெய்து ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. நேற்றும் ராணிப்பேட்டை பகுதியில் காலை முதல் கொளுத்திய வெயிலால் வெப்பத்தின் பிடியில் சிக்கி பொதுமக்கள் தவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம், பொன்னை, மேல்பாடி பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் சுழன்று அடித்தது. பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. பெண்களும், சிறுவர்களும் குதூகலத்துடன் வானத்திலிருந்து விழுந்த ஆலங்கட்டிகளை கையில் பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்களை வாட்டி வதைக்கும் வெப்பம் சற்றே தணிந்துள்ளது.

ராணிப்பேட்டையில் எம்.பி.டி.சாலை (சென்னை சித்தூர் சாலை) ஆட்டோ நகர் அருகே உள்ள கே.கே.நகரில் மழையின் காரணமாககுடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென மழை நீர் புகுந்தது. மழைபெய்தபோது அருகில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீரை திறந்து விட்டதால் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வந்தது.

ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் சென்னை சித்தூர் சாலையில் முத்தியம்மன் கோவில் அருகில் கே.கே.நகர் நுழைவு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர். கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலையின் அதிகாரிகள் உடனடியாக பேசியதால் கழிவுநீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.

மழைநீர், கழிவுநீர் வீடுகளில் புகுந்துவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ராணிப்பேட்டையில் சென்னை சித்தூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.