மாவட்ட செய்திகள்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் மீட்பு

வேடசந்தூர் அருகே மாயமான பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அவர்கள் சென்னைக்கு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே மாயமான பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அவர்கள் சென்னைக்கு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

மாணவர்கள் மாயம்

வேடசந்தூர் அய்யனார் நகரை சேர்ந்த சரவணன் மகன் ஸ்ரீராம் (வயது 17). இவர், காசிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். வேடசந்தூர் அருகே சேணன்கோட்டையை சேர்ந்த வேலுச்சாமி மகன் ஹரிஹரன் (17). இவர், சுள்ளெரும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நண்பர்களான ஸ்ரீராமும், ஹரிகரனும் கடந்த 10-ந்தேதி தங்களது வீடுகளை விட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் தரப்பில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவர்களை தேடி வந்தனர்.

சென்னையில் மீட்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீராம் தனது தாயாருக்கு செல்போனில் தாடர்பு கொண்டு பேசினார். அப்போது சென்னையில் பணம் இன்றி தவிப்பதாகவும், எங்களை வந்து அழைத்து செல்லுங்கள் என்றும் கூறினார்.

இதனால் பதறிபோன மாணவர்களின் பெற்றோர்கள், சென்னைக்கு விரைந்து சென்று ஸ்ரீராம், ஹரிஹரனை மீட்டனர். பின்னர் அவர்களை நேற்று காலை வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, போலீசாரிடம் பெற்றோர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

சினிமாவில் நடிக்க...

அதில், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சென்னைக்கு சென்றால், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினோம். இதனால் நாங்கள் சென்னைக்கு செல்ல முடிவு செய்தோம். இதற்காக ஸ்ரீராம் தனது வீட்டில் இருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்து வந்தார்.

பின்னர் நாங்கள் 2 பேரும் பஸ்சில் சென்னைக்கு சென்றோம். அங்கு ஸ்டூடியோக்களில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டோம். ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. மேலும் நாங்கள் கொண்டு வந்த பணமும் செலவாகிவிட்டதால் செய்வதறியாது அலைந்தோம். சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் செல்போனை வாங்கி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம் என்றனர்.

இதையடுத்து 2 மாணவர்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.