மாவட்ட செய்திகள்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலை மோதும் பெண்கள் கூட்டம்

இருசக்கர வாகனத்துக்கு மானியம் தருவதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து பழகுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மதுரை,

பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகன விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22-ந்தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஓட்டுனர் உரிமம் நகல் அல்லது பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக பழகுனர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 தினங்களில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பழகுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மதுரையில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் வழக்கமாக தினமும் 50-ல் இருந்து 70-வரையிலான விண்ணப்பங்களே பதிவு செய்யப்படும். ஆனால் இருசக்கர வாகன திட்டத்தில் பயனடைய, பழகுனர் உரிமம் கட்டாயம் என்று அறிவித்ததை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி முதல் மக்கள் கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நோக்கி படை எடுத்துள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் சுமார் 900-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மதுரையில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்துள்ளனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், அவர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மானியம் பெற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அன்றைய தினம் விண்ணப்பித்தால் சரியாக இருக்காது. அதுபோல், இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்காமல் விட்டுவிட்டால் நாளை, நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் விண்ணப்பிக்க முடியாது. எனவே இன்று அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமில்லை.

வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் போன்ற பகுதியில் உள்ள பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் எல்.எல்.ஆர். வழங்கும் வகையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...