வறட்சி நிவாரண பணிகள், குடிநீர் பிரச்சினை, குடிமராமத்து பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசியபோது எடுத்த படம். அருகில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ரத்தினவேல் எம்.பி., திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி உள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களின் வறட்சி நிவாரண பணிகள், குடிநீர் பிரச்சினை, குடிமராமத்து பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். 4 மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வறட்சி நிவாரண பணிகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வறட்சி நிவாரண நிதி
தமிழகத்தில் 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2 ஆயிரத்து 247 கோடியை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வறட்சி நிவாரண நிதி முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசி ஆய்வு செய்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் நலனை காப்பதற்காக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மாநில அரசின் பங்காக 522 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு நிவாரணம் கிடைக்கும். நிலவரி 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க அனைத்து
மாவட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. குடி மராமத்து பணிகளை செய்வதற்காக இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கால்நடைகளுக்கான தீவனம் மானிய விலையில் விற்கப்படுகிறது. வறட்சி நிவாரண பணிகள் 100 சதவீதம் மக்களை சென்றடையும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
100 நாள் முத்தாய்ப்பு
ஜெயலலிதா தலைமையில் பதவி ஏற்ற இந்த அரசின் ஓராண்டு நிறைவு நாளில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 100 நாட்களை முத்தாய்ப்பாக நிறைவு செய்து இருக்கிறது. நிலையான இந்த அரசு, நிலையான வளர்ச்சி பணிகளை செய்து வருவதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு வெற்றி பயணம் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் உதயகுமார் அளித்த பதில்களும் வருமாறு:-
நேசக்கரம் நீட்டி உதவி
கேள்வி:- தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு எந்த அளவில் உள்ளது?
பதில்:- பிரதமர் மோடியை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்த போது தமிழக அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார். நமது மாநிலம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை கொடுத்த போது அவற்றை நிறைவேற்ற நேசக்கரம் நீட்டி உதவுவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார்.
கேள்வி:- மத்திய அரசு வெறும் வாக்குறுதி தான் அளிக்கிறதா? இந்த 100 நாட்களில் என்னென்ன உதவியை செய்து இருக்கிறது?
பதில்:- வறட்சி தொடர்பாக மத்திய அரசிடம் நாம் வைத்த கோரிக்கைகளை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் காரணமாக தான் வறட்சி நிவாரணம் கேட்ட 10 மாநிலங்களில் தமிழகத்திற்கு அதிக பட்சமாக ரூ.1,478 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். மாநில அமைச்சர்கள் துறை சார்ந்த மத்திய மந்திரிகளிடம் தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி கேட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழக மின்சார துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது. இப்படி தமிழக திட்டங்களுக்கு நிதி பெறுவதில் வெற்றி அடைந்து வருகிறோம். தமிழக திட்டங்களுக்கு அவர்கள் நேசக்கரத்துடன் உதவி செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். நிருபர்கள் மேலும் பல்வேறு கேள்விகள் கேட்க முயன்றபோது அவர் பேட்டியை முடித்து கொண்டார்.
4 மாவட்ட கலெக்டர்கள்
முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா, டி. ரத்தினவேல் எம்.பி, மாவட்ட கலெக்டர்கள் பழனிசாமி (திருச்சி), அண்ணாதுரை (தஞ்சாவூர்), நிர்மல்ராஜ் (திருவாரூர்), ராஜேஷ் (கடலூர்), எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், செல்வராஜ் மற்றும் 4 மாவட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.