கரூர் 
மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த 1181 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்,

பொது வேலை நிறுத்தம்

4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 2 நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அதன்ஒருபகுதியாக கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள் சார்பில் எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனையொட்டி தொழிற்சங்கத்தினர் கண்டன உரையாற்றினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கரூர்-கோவை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யு.டி.யு.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., கே.ஏ.டி.ஏல்.யு.-எப், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

குளித்தலை

குளித்தலையில் தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் மின்சார ஊழியர் சங்கத்தினர் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குளித்தலை காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ தலைமை தாங்கினார். தொடர்ந்து காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து குளித்தலை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் செய்ய வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அந்த இடத்திலேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரத்தில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலைமறியல் நடந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் கே.வி.கணேசன் உள்பட 20 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

தரகம்பட்டி

தரகம்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக செல்ல புறப்பட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தரகம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

தோகைமலை

தோகைமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ்நாடு பொது தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 131 பேரையும் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

1181 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, பள்ளப்பட்டி, தோகைமலை , கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி ஆகிய 6 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 1181 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.