ஊட்டி
ஊட்டியில் தொடர் மழையால் ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகி வீணாகி வருகின்றன.
ரோஜா மலர்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜா பூங்காவில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு ரகங்கள் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 4,201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் உள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.
இதையொட்டி வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும், ரோஜா செடிகள் நன்றாக வளர்வதற்காகவும் கடந்த டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக கவாத்து செய்யப்பட்டு வந்தது. கடந்த மாத இறுதியில் இருந்து அனைத்து செடிகளிலும் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ரோஜா கண்காட்சி நடக்கவில்லை. நடப்பாண்டிலும் கோடை சீசன் விழாக்கள், கண்காட்சிகள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது.
அழுகி வீணாகிறது
இதற்கிடையே ஊட்டி நகரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களில் தண்ணீர் நின்றதால் அவை அழகி வருகின்றன. மேலும் மலர்களில் உள்ள இதழ்கள் உதிர்ந்து கீழே கொட்டிக் கிடக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்காக பராமரிக்கப்பட்டு வந்த செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கியும் கண்டு ரசிக்க ஆளில்லை.
இது ஒருபுறம் இருக்க அவர்களுக்காக தயார் செய்யப்பட்ட மலர்கள் அழுகி வீணாகி வருகின்றன. இதனால் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் வருத்தம் அடைந்து உள்ளனர்.
அதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் மாடம், கண்ணாடி மாளிகைகள் தவிர திறந்தவெளியில் பூந்தொட்டிகளில் மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பணியாளர்கள் அழுகிய மலர்களை வெட்டி அகற்றியும், விழுந்த இதழ்களை அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.