ஆண்டிமடம்:
ஒன்றிய கவுன்சிலர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிடநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மனைவி புகழேந்தி. பா.ம.க.வை சேர்ந்த இவர் ஆண்டிமடம் ஒன்றியம் ராங்கியம் பகுதி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மாமனார் பழனிசாமி மாநில ஒப்பந்ததாரராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்கத்தில் உள்ள அறையில் சுரேஷ், புகழேந்தி ஆகியோர் தங்கள் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், அவரது வீட்டின் பின்புற கதவின் உள் தாழ்ப்பாளை லாவகமாக நெம்பி கதவைத்திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
பணம் கொள்ளை
அவர்கள், புகழேந்தி உள்ளிட்டோர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அருகில் உள்ள மற்றொரு அறைக்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தை கைப்பையில் இருந்த வங்கி கணக்கு புத்தகம், காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களோடு சேர்த்து திருடியுள்ளனர்.
பின்னர் புகழேந்தி உள்ளிட்டோர் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு வந்து புகழேந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த புகழேந்தி, மர்ம நபர்களை கண்டு சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் பின்பக்க தோட்டம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் டிக்ஸி சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.