கோவை,
இது தொடர்பாக கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில், புதிதாக பணியமர்த்தப்படும் இளம் பேராசிரியர்களின் ஆராய்ச்சிக்காக, தொடக்க நிதியாக ரூ.10 லட்சம் வழங்கி வருகிறது. இந்த நிதியை கொண்டு பேராசிரியர்கள் ஆய்வுக்கூடம் ஒன்றில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு, இந்தியாவில் உள்ள 16 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 26 இளம் பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சிக்கான தொடக்க நிதி வழங்கி உள்ளது. இதன்படி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 2 இளம் பேராசிரியர்கள் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் நிதி உதவியை பெற்று உள்ளனர்.
இந்த நிதியை கொண்டு விலங்கியல் துறை பேராசிரியர் முரளி சங்கர், கரியமில வாயு இயக்கத்தால் ஏற்படும் அமிலத்தன்மை மற்றும் அதனால் கடலில் இறால்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளார். வேதியியல் துறைத்தலைவர் சுரேஷ் தங்கராஜ், சூரியஒளி கடத்திகளில் கனிம வேதியியல் மூலக்கூறுகளின் நிகழ்வு என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.
இதேபோல் உயிர் தொழில்நுட்பத்துறையில் பணியமர்த்தப்பட்டு உள்ள பேராசிரியர் வேலாயுத பிரபுவுக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ரூ.38 லட்சம் ஆராய்ச்சி நிதியாக வழங்கி உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.58 லட்சம் நிதி உதவி கிடைத்துள்ளது.
உயரிய விருதான ஆராய்ச்சி விருதை பெற்ற 4 இளம் பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஆராய்ச்சி விருது பெற்ற பேராசிரியர் யுவராஜ், இந்த பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஆணை பெற்றுள்ளார். இவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.