மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த பிச்சையின் மகள் ராதா (வயது 13). இவர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் உறவினர்களுடன் ஆடு மேய்க்க சென்றார். இதையடுத்து அங்கு உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே தண்ணீர் எடுக்க சென்றவரை காணாததால், அவரைத் தேடி வந்தவர்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.