திருப்பத்தூர்
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்பத்தூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும், இரு சக்கர வாகனங்களில் பலர் சுற்றித்திரிவதாகவும் புகார்கள் வந்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று காலை திடீரென பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது காய்கறி கடைகளில் சமூக இடைவெளி வட்டங்கள் அமைக்கப்பட்டாமல் இருந்ததை பார்த்து சமூக இடைவெளியை ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
கடைகளுக்கு சீல்
பின்னர் கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியில் சமூக இடைவெளியின்றி கூட்டம் காணப்பட்ட கடைகளுக்கு சென்று ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை பின்பற்றமால் செயல்பட்ட 15 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக இருந்ததை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, டவுன் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் நகராட்சி அலுவலர்கள் சென்று கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மதித்து நடக்க வேண்டும்
பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த பொதுமக்களை நிறுத்தி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஊரடங்கில் அரசு உத்தரவை மதித்து நடக்கவேண்டும், கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கூறினார்.
பின்னர் அவர் கூறுகையில் ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவை ஒழிக்க முடியும். திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாத உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 95 இரு சக்கர வாகனங்கள், 22 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 81 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.