மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு குறைபாடுகளை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி : மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் பலியான விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகி இருந்தனர். இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு பாதுகாப்பு குறைபாடுகளே முக்கிய காரணமாகும். இதனை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்காக தான் பாகிஸ்தானுடன் போர் தொடுக்க இருப்பது போன்ற மாய பிம்பத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையை பா.ஜனதாவினர் கையில் எடுத்து அரசியல் செய்வது சரியல்ல.

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதை காரணம் காட்டி எடியூரப்பா அரசியல் பேசி வருகிறார். இதனை சாதகமாக பயன்படுத்தி கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜனதாவினர் திட்டமிடுகின்றனர். அவர்களது திட்டம் பலிக்காது. நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் வருகிற 4-ந் தேதி (அதாவது நாளை) ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். அதன்பிறகு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்-யார்? என்பது இறுதி செய்யப்படும். தேர்தலில் போட்டியிட அனைவரும் விரும்பினாலும், வெற்றி பெறுபவர்களை கண்டறிந்து, அவர்களுக்கே சீட் கொடுக்கப்படும்.

மண்டியா தொகுதியில் போட்டியிட சுமலதா அம்பரீஷ் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் அம்பரீஷ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். தற்போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதால் மண்டியா தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. மண்டியா தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்த பின்பு, அங்கு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

மண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் கவுடா போட்டியிடுவார் என்று மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியுள்ளார். அந்த தொகுதியில் போட்டியிடுவது யார்? என்பது பற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடா எதுவும் கூறவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்