பெரியபாளையம்,
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி நாளை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று கூறி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை மனு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தை சேர்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வேலை செய்ய விரும்பும் அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றிய பயனாளிகள் சிலருக்கு 2 ஆண்டுகளுக்கு சம்பள பாக்கி உள்ளது.
வேலை செய்த அனைவருக்கும் உடனடியாக சம்பள பாக்கி தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்க வட்ட செயலாளர் ரமா தலைமையில் ஏராளமானோர் பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கோரிக்கை மனு அளிப்பதற்காக பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வந்தடைந்தனர்.
முற்றுகை
வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சரவணன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த கீதா, மோகனா, பத்மா, ஜெயபாரதி, ரம்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்ணன், பாலாஜி, ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) சுதா விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேற்கண்ட பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்தில் தீர்ப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.