நிலக்கோட்டை:
நிலக்கேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நேற்று திரண்டு வந்தனர். பின்னர் மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நீலாவதி, மாவட்ட தலைவர் கந்தசாமி, தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் முருகன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானவர்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி அங்கு வந்து மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 100 நாள் வேலை வழங்கப்படும் என்று அதிகாரி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.