மாவட்ட செய்திகள்

மண் அள்ள வந்த 14 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

புதுப்பாளையம் சரபங்கா ஆற்றில் மண் அள்ள வந்த 14 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

எடப்பாடி,

கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம், கோணசமுத்திரம் ஊராட்சி பகுதியில் சரபங்கா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஓரத்தில் காவிரி ஆற்றுமணல் போல் உள்ளதால் வீடு கட்ட இந்த மணலை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். ஆற்றின் ஓரப்பகுதியில் செங்கல் சூளைக்கு தேவையான செம்மண் அதிகம் உள்ளதால் அதனை அள்ளி செல்ல ஏராளமான டிப்பர் லாரிகள் இரவு, பகல் பாராமல் வந்து செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அப்பகுதியில் செம்மண், மண் அள்ளி செல்ல 14 டிப்பர் லாரிகளும், 3 பொக்லைன் எந்திரங்களும் பனங்காடு பகுதிக்கு வந்தன. அவற்றை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மண் அள்ள வந்தவர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேச்சேரி ஒன்றியம் குட்டப்பட்டி ஏரியில் மண் அள்ள அனுமதி கடிதம் பெற்று கொண்டு அங்கு மண் அள்ளாமல் பனங்காடு பகுதியில் மண் அள்ள வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த 14 டிப்பர் லாரிகளையும் மற்றும் 3 பொக்லைன் எந்திரங்களும் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரை முருகனுக்கு வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவற்றை சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...