வள்ளியூர், மே:
குமரி மாவட்டம் பேச்சிபாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீரை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.
விவசாயிகள் கேரிக்கை
டவ்தே புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் அதிகளவு பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பியது. அதன்படி பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரி தண்ணீர் தென் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு கடலில் வீணாக கலந்தது.
இந்த தண்ணீரை வறண்ட ராதாபுரம் கால்வாயில் திறந்தால் ராதாபுரம் தாலுகா விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு ராதாபுரம் தொகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சபாநாயகர் தண்ணீர் திறப்பு
அதன்படி நேற்று பேச்சிப்பாறை அணை தண்ணீரை நிலப்பாறை பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான மு.அப்பாவு திறந்து வைத்தார். இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்களுக்கு தண்ணீர் சென்று 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., நெல்லை தாமிரபரணி வடிநில கோட்ட கண்காணிப்பாளர் ஞானசேகரன், திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் பத்மா, கோதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், உதவி பொறியாளர் சுபாஷ், திருமூலநகர் பங்குதந்தை பீட்டர் பாஸ்டியன், தி.மு.க. வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.