மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை இசையாஸ், திருப்பலியை நடத்தினார். முன்னதாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து மூன்றாவது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.

பின்னர், இயேசுவை வரவேற்கும் வகையில் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு திருப்பலியில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமாக நள்ளிரவில் நடத்தப்படும் இந்த சிறப்பு திருப்பலி கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.