தஞ்சாவூர்,
சாலை பாதுகாப்பு வாரவிழா
தஞ்சை வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தஞ்சையில் நடந்தது.
விழாவில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
சாலை விதிகளை கடைபிடித்து நடக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 232 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். இந்த இறப்பிற்கு காரணம் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமலும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்குவதால் தான். சாலை விதிகள் தொடர்பாக தங்களுடைய பெற்றோர்கள், உறவினர்களுக்கு மாணவ, மாணவிகள் தெரியப்படுத்த வேண்டும். சாலைவிதிகளை பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுப்போட்டி
பேச்சுப்போட்டியில் கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா மேல்நிலைப்பள்ளி மாணவி சுமதி முதல்பரிசும், தஞ்சை தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சம்யுக்தா 2ம் பரிசும், தஞ்சை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வீரபாண்டி 3ம் பரிசும் பெற்றனர். கட்டுரைப்போட்டியில் தஞ்சை அக்சீலியம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா முதல்பரிசும், வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்சினி 2ம் பரிசும், தஞ்சை யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆனந்தகிருஷ்ணன் 3ம் பரிசும் பெற்றனர்.
ஓவியப்போட்டியில் தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவீன் முதல் பரிசும், மேம்பாலம் அரசு மகளிர் காது கேளாதோர் பள்ளி மாணவர் அகிலன் 2ம் பரிசும், கும்பகோணம் நகர மேல் நிலைப்பள்ளி மாணவர் பரணிதரன் 3ம் பரிசும் பெற்றனர். விழிப்புணர்வு வாசகங்கள் போட்டியில் ஜெயலட்சுமி முதல் பரிசும், காவியா 2ம் பரிசும், பாலாஜி 3ம் பரிசும் பெற்றனர்.
விழிப்புணர்வு வாகனம்
முன்னதாக இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து கிராம விழிப்புணர்வு பயண வாகனத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் சிவக்குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ரெங்கநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகரன், கருப்பையன், இந்திய செஞ்சிலுவை சங்க பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் ஜோசப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.