நாகர்கோவில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை உடனே வழங்க வேண்டும், இதுபோல பணி கொடை, விடுப்பு சம்பளம், கம்யுட்டேசன், டி.ஏ. உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும், அனைத்து பலப்பலன்களையும் பாக்கியின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மாதம்தோறும் 1ந்தேதி வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை தவணை முறையில் வழங்குவதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு சங்க தலைவர் குட்டப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரராஜ், மாநில துணை தலைவர் பால்ராஜ் மற்றும் லெட்சுமணன், பொன் சோபனராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவர்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், அவர்களது கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடம் இருந்து உரிய விளக்கம் வரும்வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்றும், தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.