திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தம்பிராஜ்(வயது 57). இவருக்கு சொந்தமாக திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியில் 9.20 சென்ட் காலி இடம் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த தம்பிராஜின் உறவினர் மணி(44) என்பவர் எனக்கு வங்கி அதிகாரிகளை நன்கு தெரியும். உங்களுக்கு தேவையான பணத்தை வங்கியில் கடனாக பெற்றுத்தருகிறேன். அதற்கு உங்கள் இடத்தின் அசல் பத்திரத்தை மட்டும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய தம்பிராஜ், அந்த இடத்தின் அசல் பத்திரத்தை மணியிடம் கொடுத்துள்ளார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட மணி, திருப்பூரில் உள்ள ஒரு வங்கிக்கும், பத்திரபதிவு அலுவலகத்துக்கும் தம்பிராஜை அழைத்துச்சென்று சில ஆவணங்களில் கையொப்பம் பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு கடன் தொகை கிடைக்க வில்லை. இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்த போது, மணி தான் லாரிகளை வைத்து தொழில் செய்து வருவதாகவும், அந்த தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறி தம்பிராஜின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.49 லட்சம் கடன் பெற்று நம்பிக்கை மோசடி செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனது பத்திரத்தை மீட்டுத்தரும்படி கடந்த 2009ம் ஆண்டு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் தம்பிராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பழனி, குற்றம்சாட்டப்பட்ட மணிக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.