பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு ரோடு, துறைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் சின்னமுத்து, லட்சுமணபெருமாள், ரத்தினம், ரவி, அழகுவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், தேதி குறிப்பிடப்படாத மிட்டாய் பாக்கெட்டுகள் மற்றும் மளிகை கடையில் இருந்த தரம் குறைந்த மைதா மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்த னர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு கொளுத்தி அழித்தனர். மேலும் இனிப்பு-கார வகை பலகாரங்கள் தயார் செய்யப்படும் பேக்கரி குடோன்களிலும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், சில கடைகளில் இருந்து பொதுமக்கள் வாங்கி செல்லும் தரமற்ற உணவு பொருட்களால் அவர்கள் ஏமாற்றப்படுவதுடன் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டே இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம்-2006-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.