தஞ்சாவூர்,
தமிழகத்தில் காதுகேளாதோர் பள்ளி 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் தஞ்சை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பிளஸ்-2 வரை உள்ளது. மற்ற இடங்களில் செயல்படும் பள்ளிகளில் ஒருசில பள்ளிகள் 8-ம் வகுப்பு வரையும், ஒரு சில பள்ளிகள் 10-ம் வகுப்பு வரையும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளியுடன் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகளும் உள்ளன. அதன்படி தஞ்சை மேம்பாலம் பகுதியில் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும், பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியும், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகமும், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம் உள்ளன.
தஞ்சையில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் 110 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். மீதமுள்ள 30 பேர் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தினமும் வீட்டில் இருந்து வந்து படித்து செல்கிறார்கள்.
விடுதியில் தங்கி படிக்கும் 110 மாணவ, மாணவிகளில் 64 பேர் மாணவர்கள் ஆவர். 46 பேர் மாணவிகள் ஆவர். இதில் மாணவிகள் தங்கி இருக்கும் கட்டிடம் சமீபத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். மாணவர்கள் விடுதிக்கான கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த கட்டிடத்திற்கு மேற்கூரை ஆஸ்பெட்டாஸ்ஷீட்டால் ஆனது. இந்த கட்டிடத்தில் மாணவர்கள் தங்கும் அறையுடன், சாப்பாட்டுக்கூடம், சமையல் கூடமும் உள்ளது.
இதில் மாணவர்கள் தங்கும் அறையின் மேற்கூரையான ஆஸ்பெட்டாஸ்ஷீட்டில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே ஒழுகிய வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பகலில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. இதனால் மாணவர்கள் விடுதிகளுக்குள்ளும் மழைநீர் விழுகிறது. இதையடுத்து விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் வகுப்பறைகளில் இரவுநேரங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 1 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நீலை நீடித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்று காதுகேளாதோர் பள்ளி. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் விடுதி மழைபெய்யும் பொது ஒழுகுவதால் நீர் உள்ளே வந்தது. இதையடுத்து கலெக்டரின் நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது. தற்போது நீர் ஒழுகுவதை முற்றிலும் சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி வந்தவுடன் அந்த பணிகள் மேற்கொள்ளப் படும்என்றார்.