மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திடீர் ஆய்வு

திருப்பத்தூர், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கபசுர குடிநீர்

திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே முன்கள பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி, திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.ரகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிகருப்பன் கலந்து கொண்டு முன்கள பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்.
பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்தார். திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனையில் சித்த மருத்துவத்துடன் 100 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு 46 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆஸ்பத்திரியில் இதய நோய் முதுநிலை டாக்டர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆய்வின் போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டு ராஜ் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், உஷாலி சுரேஷ், உதய சண்முகம், மாவட்ட மாணவரணி ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

இதேபோல் காரைக்குடி அரசு தலைமை புதிய மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வார்டு தயார்ப்படுவது குறித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார். டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை இருந்தால் உடனே தெரிவிக்குமாறு அவர் கேட்டு கொண்டார்.
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதிய அளவில் ஆக்சிஜன், மருந்துகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மணி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், திருப்பத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கென்னடி, காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.