தர்மபுரி,
சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி தர்மபுரி மாவட்டத்தில் இயக்கும் பள்ளி வாகனங்களின் தரநிலை குறித்த முதல் கட்ட சிறப்பு ஆய்வு தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி நடத்தினார். வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் முன்னிலை வகித்தார்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,054 பள்ளி வாகனங்களில் 272 பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. பள்ளி வாகனங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் செயல்படுத்தப்படுகிறதா? விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், வாகனங்களின் தரம், இயங்கும் திறன் ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது குறைபாடுகள் கொண்ட 17 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அந்த வாகனங்களில் உரிய சீரமைப்பு பணிகளை முழுமையாக மேற்கொண்டு மீண்டும் அவற்றை மறு ஆய்விற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. பள்ளி வாகனங்களின் தர நிலை குறித்த 2-ம் கட்ட ஆய்வு வருகிற 30-ந்தேதியும், 3-ம் கட்ட ஆய்வு வருகிற மே மாதம் 15-ந்தேதியும், இறுதி கட்ட ஆய்வு மே மாதம் 31-ந்தேதியும் நடத்தப்பட உள்ளது.
அதற்குள் அனைத்து பள்ளி வாகனங்களையும் அவற்றின் உரிமையாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜாமணி, அன்புசெழியன் ஆகியோர் உடனிருந்தனர்.