மாவட்ட செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

நுங்கம்பாக்கத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தினேஷ் குமார் என்ற வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை நக்கீரன் நகரைச் சேர்ந்தவர் விநாயகம், அவரது மகன் தினேஷ் குமார் (வயது, 21). கூரியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி, தினேஷ் குமார் படுகாயம் அடைந்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தினேஷ் குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததார். இதனை டாக்டர்கள் அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கனத்த இதயத்துடன் தினேஷ் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

அதன்படி தினேஷ் குமாரின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுக்கப்பட்டது. இதில் அவர் சிறுநீரகம் அரசு பொது மருத்துவமனைக்கும், இதயம் குளோபல் மருத்துவமனைக்கும், கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் ஸ்டான்லி மருத்துவமனைக்கும், நுரையீரல் அப்பல்லோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.