மாவட்ட செய்திகள்

ரூ.10¾ லட்சம் கையாடல் புகார் அரியானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்

ரூ.10¾ லட்சம் கையாடல் புகாரில், அரியானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம், மார்ச்.29-

அரியானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் போலி உறுப்பினர்களை சேர்த்து பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் பால்வள துணைப்பதிவாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட அரியானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2019-20-ம் ஆண்டின் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதிக கையிருப்பு தொகை வைத்திருந்ததும், மாதிரி பால் விற்பனை தொகையை முழுமையாக வரவு வைக்காமல் இருந்ததும், போலி உறுப்பினர் எண்ணை உருவாக்கி அதில் பால் ஊற்றியதாக வரவு வைத்து அதற்குண்டான தொகையை சங்க செயலாளர் ரத்தினவேல் தனது சொந்த வங்கி கணக்கில் வரவு வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, சங்க உறுப்பினர்களின் ரூ.10 லட்சத்து 79 ஆயிரத்து 130-ஐ சங்க செயலாளர் ரத்தினவேல் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அலுவலரின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சங்க செயலாளர் ரத்தினவேலை நேற்று பணி இடைநீக்கம் செய்து பால்வளம் துணை பதிவாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.