மாவட்ட செய்திகள்

ராகுல்காந்தியை அவதூறாக பேசியதாக கூறி ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தியை அவதூறாக பேசியதாக கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சமீபத்தில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அவர் ராகுல்காந்தியையும் கட்சியையும் அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ்காந்தி சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.பிரபு தலைமை தாங்கினார். நகர தலைவர் கிஷோர்பிரசாத் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளர் வக்கீல் சுதா தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எல்.பார்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாவட்ட துணைத் தலைவர் டி.சி.எஸ்.சுப்பிரமணி, ஒன்றிய தலைவர்கள் மணி, சாந்தசீலன் உள்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி படத்தை செருப்பால் அடித்து, கிழித்து அவர்கள் கோஷமிட்டனர். முடிவில் பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.