திருக்கோவிலூர்,
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவரும், அரகண்டநல்லூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா மாவட்ட கலெக்டர் எல்.சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் விவசாயிகள் நலன் கருதி உயர் மின்கோபுரங்கள் அமைக்க வேண்டும். மேலும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களை விற்பனை செய்துவிட்டு அதில் கிடைக்கும் பணத்துடன் விவசாயிகள் சிலர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க செல்கின்றனர். அவ்வாறு செல்லும் விவசாயிகள் மதுபோதையில் மயங்கி விழும் போது, அவர்களிடம் இருக்கும் பணத்தை சமூக விரோதிகள் அபேஸ் செய்து கொண்டு செல்கின்றனர்.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரகண்டநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.