மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு

கரட்டூர் மற்றும் காட்டுவலசு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீக்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம் மற்றும் கட்சியினர் சிலர் காலி மதுபான பாட்டில்களை கயிற்றில் கோர்த்து கையில் எடுத்துக்கொண்டு ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், இதுபோன்று மதுபான பாட்டில்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரக்கூடாது என்று எச்சரித்தனர்.

அதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர், கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் மஞ்சள் நீராட்டு விழா, கம்பம் பிடுங்கும் விழா ஆகியவை நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 1ந் தேதி (சனிக்கிழமை) வரை 4 நாட்கள், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் கரட்டூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:

கருவல்வாடிப்புதூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு எங்கள் ஊருக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் அந்த வழியாக பள்ளிக்கூடத்துக்கு சென்று வரும் மாணவ மாணவிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.

எனவே கருவல்வாடிப்புதூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றியோ அல்லது நிரந்தரமாக மூடிவிடவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

திங்களூர் அருகே உள்ள காட்டுவலசு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:

எங்கள் பகுதியில் உள்ள செட்டிக்குமார் சாமி கோவில் எதிரிவில் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் கோவிலில் வழிபாடு மற்றும் பூஜைகள் செய்ய இடையூராக இருக்கும்.

மேலும் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டத்தால் அதிக அளவில் திருட்டு சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுத்திருந்த மனுவில், ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும். ஈரோடு மாநகராட்சி 57வது வார்டு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து அகற்றவேண்டும். ஈரோடு மோசிகீரனார் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஜனநாயக மக்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குளவிகரடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், எல்லமடை, புதுக்கரைபுதூர், தொட்டியபாளையம், குளவிகரடு ஆகிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

சித்தோடு பகுதியை சேர்ந்த சிலர் சாயம் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் செயல்பட்டுவரும் சாய மற்றும் சலவை ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மாசு அடைந்து வருகிறது. எனவே தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு செய்து கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் ஏராளமானோர் நேற்று மனு கொடுதுதனர். மொத்தம் 321 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகாராணி, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.