திருவாரூர்;
திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரை திருவிழா
திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த 108 வைணவ திவ்ய தேசங்களில் 27-வது தலமாக உள்ள இந்த கோவிலில் 16 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் பெருமாள் உள்ளார். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினசரி வீதிஉலா நடைபெற்றது.
தரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரேட்டம் சித்திரா பவுர்ணமி நாளான நேற்று நடைபெற்றது. விழாவில் பக்தவத்சல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் கோவிலிருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கட்ரமணா, கோவிந்தா என்று பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அர்ச்சனை செய்து வழிபாடு
கோவிலை சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்களுடன் வாகனமும் தயார் நிலையில் தேரை பின் தொடர்ந்து சென்றது. தேர் வலம் வந்த பகுதியில்
வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பக்தவத்சல பெருமாள் பக்தர்கள் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.