மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை காரில் வந்த கும்பல் வெறிச்செயல்

ஓசூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடியை காரில் வந்த ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

ஓசூர்,

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் பக்கமுள்ளது லிங்காபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 35). பிரபல ரவுடி. கடந்த 4.12.2018 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள லக்கசந்திரம் என்ற இடத்தில் விஜி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் மகேஷ்குமாரை கர்நாடக மாநிலம் ஆடுகோடி போலீசார் கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்திருந்தனர்.

கடந்த 1 மாதங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கர்நாடக மாநிலத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த மகேஷ்குமார், லிங்காபுரம் பகுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனது மகன் கிஷோரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று பள்ளி வாகனத்தில் விட்டு விட்டு மகேஷ்குமார் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பாகலூர் அருகே பேரிகை சாலையில் அவர் 6.15 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. பின்னர் அந்த காரில் வந்த 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் மகேஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை வழிமறித்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து திபுதிபுவென்று இறங்கிய ரவுடி கும்பல், தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் மகேஷ்குமாரை சரமாரியாக வெட்டியது.. இதில் கழுத்து, கை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொலையை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மற்றும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையுண்ட மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த விஜி கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் தரப்பை சேர்ந்த ரவுடி கும்பல் மகேஷ்குமாரை நோட்டமிட்டு தீர்த்து கட்டியிருக்கலாம் என்று பாகலூர் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலையுண்ட ரவுடி மகேஷ்குமாருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ஓசூர் அருகே பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் சென்ற ரவுடியை, மற்றொரு ரவுடி கும்பல் காரில் வந்து வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...