மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே பயங்கரம்; நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை

ஆம்பூர் அருகே நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை மயக்க ‘ஸ்பிரே’ அடித்து கொலை செய்த பேரன் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் கொல்லமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதை பார்த்த அவரது உறவினரான சாமிநாதன் என்பவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது ராஜம்மாள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சாமிநாதன் உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் வீட்டிற்கு வந்த உறவினர்கள், ராஜம்மாளின் உடலை வீட்டிற்கு வெளியே வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் திடீரென உறவினர்களுக்கு ராஜம்மாளின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் உறவினர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

அவர்களை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பின்தொடர்ந்து ஓடியதில், 2 வாலிபர்கள் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து உறவினர்கள் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பொதுமக்கள் பிடியில் இருந்த 2 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் பெங்களூரு ஜே.சி.நகர் 13-வது மெயின்ரோடை சேர்ந்த முருகன் மகன் மோனிஷ் (21) என்பதும், ராஜம்மாளின் பேரன் என்பதும், மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்த பிராஜ்வேல் (21) என்பதும் தெரிந்தது.

மேலும் மோனிஷ் தனது நண்பர்களான பிராஜ்வேல், வினோத் ஆகியோருடன் நேற்று காலை ராஜம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பாட்டியிடம் நகை, பணத்தை தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் ராஜம்மாள் நகை, பணத்தை தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் கொண்டு வந்த மயக்க ஸ்பிரேவை ராஜம்மாள் முகத்தில் அடித்துள்ளனர். அதில் மூச்சு திணறி கீழே விழுந்த ராஜம்மாள் பரிதாபமாக இறந்து போனார். இதனால் பயந்து போன 3 பேரும் வீட்டின் ஒரு அறையில் பதுங்கி இருந்துள்ளனர். உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்ததும் தப்பி ஓடியுள்ளனர் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிஷ், பிராஜ்வேல் ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை, பணத்திற்காக நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்