மாவட்ட செய்திகள்

பீமா-கோரேகாவ் வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானது தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்

பீமா-கோரேகாவ் வன்முறை வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கை சரியானது என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மராட்டிய அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு மாற்றிக்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வழக்கில் வெளிவரும் உண்மையை மூடி மறைப்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக அந்த கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டிய போலீசார் நகர்ப்புற நக்சலைட்டுகளின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பை கண்டுபிடித்தனர். இதுகுறித்த ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் போலீசாரின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தது.

ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்த வழக்கை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொண்டது.

போலீசாரின் மன உறுதியை குறைத்து, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது.

நகர்புற நக்சல்கள் நாடு முழுவதும் பரவி உள்ளனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நகர்புற நக்சல்கள் இருப்பதாக கூறியுள்ளது. எனவே இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு எடுப்பதை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். சமூக விரோத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...