மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம்

இமாசல பிரதேசத்தில் பணியில் இருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான கோவில்பாறையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள கோவில்பாறையை சேர்ந்தவர் முத்தையா (வயது 31). இவருடைய மனைவி ஆறுமுகவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்தையா இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது இமாசலபிரதேசத்தில் இந்தோ-திபெத் காவல்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் முத்தையாவின் உடல் மதுரைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமமான கோவில்பாறைக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது.

அங்கு முத்தையாவின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மகாராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் முத்தையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது தி.மு.க. கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சேர்மலை மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

பின்னர் அவருடைய உடல் கோவில்பாறை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் முன்னிலையில் இந்தோ-திபெத் காவல்படை பிரிவு போலீசார் 7 துப்பாக்கி குண்டுகள் முழங்க முத்தையாவின் உடலை அடக்கம் செய்தனர்.