கட்டுமான பணிகள்
பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் பல்வேறு கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. போடியில் ரூ.5 கோடியே 55 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இங்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.
அதேபோன்று ரூ.1 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதி, தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் 8 வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிடம் கட்டும் பணி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 92 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் 12 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலெக்டர் ஆய்வு
இந்த அரசு கட்டிடங்கள் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் தரமாக நடக்கிறதா? என்று ஆய்வு செய்து, பின்னர் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:-
போடி அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் படிக்கும் அறை, காப்பாளர் அறை, அலுவலக அறை, மாணவிகள் தங்கும் அறை, சமையல் அறை, உணவு அருந்தும் அறை, கழிப்பிடம் ஆகிய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தரைத்தளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நீதிபதிகள் அறை, வழக்கு சம்பந்தப்பட்டோர் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கும் அறைகள், கைதிகள் அறை, ஆண் மற்றும் பெண்களுக்கான கழிப்பிடம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.
முதல் தளத்தில் 2 நீதிமன்றகளுக்கான அலுவலகங்கள், அலுவலக பயன்பாட்டிற்கான பல்வேறு அறைகளும், 2-ம் தளத்தில் காணொலி கலந்தாய்வு கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடனான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தரைத்தளத்தில் 4 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 4 வகுப்பறைகளும், 2-ம் தளத்தில் 2 வகுப்பறைகளும் என மொத்தம் 12 வகுப்பறைகளுக்கான கட்டுமானப்பணிகளும், தரை மற்றும் முதல் தளத்தில் அறிவியல் ஆய்வக கட்டுமானப்பணிகள் மற்றும் 373 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.