மாவட்ட செய்திகள்

தமிழகத்திற்கு மழை, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்

தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

சிக்கல்:

தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தியாகிகள் நினைவு தினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 தொழிலாளர்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இதன் 53-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கீழவெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தியாகிகள் நினைவகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தியாகிகள் நினைவிடத்தில் கொடி ஏற்றிவைத்து, நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன், செல்வராஜ் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, மாரிமுத்து மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பு அணி நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயிகளை முற்றிலும் அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விளைநிலங்களை ஒப்படைக்க மத்திய அரசு நினைக்கிறது. சாதிய சக்திகளை எதிர்த்து குரல் கொடுத்தாலும் கூட சாதி கொடுமைகள் ஒழித்தபாடில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு தான் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனடியாக மழை வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

தொடர்ந்து போராடுவோம்

மழை நிவாரண நிதி ரூ.30 ஆயிரத்தை உயர்த்தி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

----

நாம் தமிழர் கட்சியினர் கோஷத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பால் வாக்குவாதம்

கீழவெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக மதியம் 1.55 மணிக்கு வந்தார். அப்போது 15 பேர் மட்டும் சென்று அஞ்சலி செலுத்துமாறு கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர். இதனால் சீமான் உள்பட 15 பேர் மட்டும் சென்று தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம். வீரவணக்கம் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 5 நிமிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.