பெங்களூரு:
75 ஆயிரம் மரக்கன்றுகள்...
75-வது சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூருவில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா, மரக்கன்றை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஊரடங்கு அமல்படுத்தப்படாது
பெங்களூருவில் தற்சமயம் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதும் குறைவாக தான் உள்ளது. பெங்களூரு நகரவாசிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக
மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியமாகும். வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசோ, மாநகராட்சியோ எடுக்கவில்லை.
10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க, கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி 2 முறை போட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கும், கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் யாரும் ஆதங்கப்பட வேண்டாம். அரசின் விதிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றினால், கொரோனா பரவலை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.