மாவட்ட செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று அரியலூரில் நடந்த மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைமை மருந்தாளுனர் பாண்டியன் தலைமை தாங்கினார். மருந்தாளுனர் சங்க மாநில தலைவர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜ கணேஷ் விளக்க உரையாற்றினார்.

பணியிடங்கள் உருவாக்க வேண்டும்

கூட்டத்தில், 1,500 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி மற்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவில் உள்ள மருந்தாளுனர்களை (ஆர்.பி.எஸ்.கே.) பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஐந்தாம் கட்ட காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ விதி தொகுப்பு அடிப்படையில் 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுனர், 75 உள் நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுனர் என்ற அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் மருந்து கிடங்கு அலுவலர், தலைமை மருந்தாளுனர்கள் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆர்.பி.எஸ்.கே. மருந்தாளுனர் சுரேஷ், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் குமரன் உள்ளிட்ட ஏராளமான மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர்.