நாகப்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்த பகுதியைசேர்ந்த பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாகை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவர் அணி செயலாளர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட செயலாளர் வைரவநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் பிரசன்னா, நகர செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தெற்கு மாவட்ட பொருளாளர் பிரபாகர், வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், கட்சியை சேர்ந்த பரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.