மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது 20–க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்கள்

பாவூர்சத்திரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 20–க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே அரிகிருஷ்ணன் என்பவர் நேற்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 கார்களில் வந்த 5 பேர், திடீரென அரிகிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,000ஐ பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள், சப்இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நெல்லைதென்காசி ரோட்டில் வட்டாலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை வழிமறித்து சோதனை செய்தபோது, அந்த கார்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கார்களில் வந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்த வெற்றிவேல் மகன் துரைமுருகன் (வயது 28), பால்ராஜ் மகன் உதயகுமார் (23), கன்னியாகுமரி மாவட்டம் இலந்தவிளையை சேர்ந்த கந்தசாமி மகன் அர்ஜூன் (24), தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (25), தண்டையார்விளையை சேர்ந்த மரியசெல்வன் மகன் ஜேசுபாலன் (29) என்பதும், அரிகிருஷ்ணனிடம் பணம் பறித்தவர்கள் என்றும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் மீது நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.