தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக்கூட்டம் தாளமுத்துநகர் கீழஅழகாபுரியில் நடந்தது. கூட்டத்துக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி கழக செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். முத்தையாபுரம் பகுதி செயலாளர் கருணாகரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா, கருங்குளம் ஒன்றிய செயலாளர் மகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது:
தி.மு.க.வை சிலர் அழித்துவிடலாம் என்று பேசி வருகின்றனர். தி.மு.க.வை யாராலும் அசைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. தமிழ்நாடு இருக்கும் வரை தி.மு.க. இருக்கும். ஏனென்றால் தான்தோன்றிதனமாக ஆரம்பிக்கப்பட்டது அல்ல தி.மு.க.. அடிவேரை தொட்டு ஆரம்பிக்கப்பட்டது.
கலைஞர் 60 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறார். கலைஞர் உடல், பொருள், ஆவி அனைத்தும் தமிழ்தான். மொழியை காப்பாற்றுபவர்தான் கலாசாரத்தை காப்பாற்ற முடியும். அந்த வகையில் கலைஞர் கலாசாரத்தை பாதுகாத்து வருகிறார். தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் அனாதையாக இருப்பார்கள்.
தி.மு.க.வில் இருந்தால்தான் அவர்களுக்கு விலாசம் கிடைக்கும். எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. தமிழ்நாடு தலைநிமிர வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டு போட்டுவிடக்கூடாது. அடுத்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சர் ஆவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட இளைஞர் அணி பில்லாஜெகன், வார்டு செயலாளர் பாரதிராஜா, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தனபால், பொன்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பண்டாரம்பட்டி சிவக்குமார் நன்றி கூறினார்.