நீலகிரி,
கோத்தகிரி பகுதியில் வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம். இதில் டிசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாதத்திலும் கடும் பனிப்பொழிவு இருப்பதுடன் அவ்வப்போது உறைபனியின் தாக்கமும் இருக்கும். பின்னர் பிப்ரவரி மாத இறுதியில் பனியின் தாக்கம் குறைந்த கோடை சீசன் தொடங்கும்.
ஆனால் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் உறைபனி பொழிவு ஏற்பட்டு புல்தரைகள், சாலைகளின் வெள்ளை நிறத்தில் உறைபனி காட்சியளிக்கிறது. இந்த உறைபனி காலை 9 மணிக்கு வெயில் சுட்டெரிக்கும்போதும் கூட கரையாமல் உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களின் இருக்கைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது.
அதேபோல் மாலை 5 மணி முதலே பனியின் தாக்கம் தொடங்கி அதிகாலை நேரத்தில் உறைபனியின் தாக்கம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக காலையில் எழுந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் குளிரில் நடுங்கியவாறு சென்று வருகின்றனர். மேலும் பகல் நேரங்களில் கூட பனியின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள்.
தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் மீது பனி படர்ந்து காணப்படுகிறது. உறைபனி இலைகளின் மீது படிந்து இருப்பதால் தேயிலை கொழுந்துகள் கருகி வருகின்றன. இதன் காரணமாக தேயிலை மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு சிறு தேயிலை விவசாயிகள் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று உறைபனியின் தாக்கம் அதிகரித்தால் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகிவிடும். மீண்டும் பழைய நிலைக்கு தேயிலை செடிகள் திரும்ப சுமார் 3 மாதங்களுக்கு மேல் ஆகும். அதேநேரம் மழை இருந்தால் மட்டுமே தேயிலை செடிகளை காப்பாற்ற முடியும். தேயிலை செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.
உறைபனியின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து வருவதால் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்து விட்டது. வனவிலங்குகள் நடமாட்டத்தால் பொமதுமக்கள் வீடுகளில் இருந்து அச்சத்துடன் வெளியே வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபோன்று மாறி மாறி நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக சளி, காய்ச்சல் மற்றும் பனி காரணமாக உடலில் தோன்றும் வெடிப்புகள் என உடல் ரீதியாக மக்கள் அவதிப்படுகிறார்கள். தேயிலை சாகுபடி பாதிக்கப்படுவதால் விவசாயிகளும் கவலையடைந்து உள்ளனர். மழை பெய்தால் மட்டுமே பனியின் தாக்கம் சற்று குறையும். எனவே கோடை மழை எப்போது வரும் என மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊட்டிகூடலூர் சாலை சூட்டிங்மட்டத்தில் உள்ள புல்வெளிகள் காய்ந்து, அதன் பசுமையை இழந்து விட்டன. அதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் களையிழந்து காணப்படும் பகுதிகளை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.