சத்திரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து வனப்பகுதிகளை சீரமைக்கும் பணியில் நேற்று ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அதன்படி, நேற்று மதியம் வடகாடு மலைப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் முருகன் (வயது 47), சோலையப்பன், வனவர் தாஜூதீன், வனக்காப்பாளர்கள் ஜீவானந்தம், சுப்பிரமணி ஆகியோர் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு மரம் முறிந்து முருகன், சோலையப்பன், சுப்பிரமணி ஆகியோர் மீது விழுந்தது.
இதில் படுகாயமடைந்த 3 பேரையும், வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார்.
மற்ற இருவரும் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணியின் போது வேட்டை தடுப்பு காவலர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இறந்த முருகனின் குடும்பத்தினரை, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி, தலைமை வனபாதுகாவலர் திருநாவுக் கரசு, மாவட்ட வன அலுவலர் வித்யா ஆகியோர் ஆறுதல் கூறினர்.