பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் நவின்குமார் (வயது 18). அதே ஊரைச் சேர்ந்த துரை மகன் சிவா (18).
இவர்கள் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் மீண்டும் பாண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கபிலர்மலை அருகே உள்ள ரங்கம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் நவின்குமார், சிவா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து 2 பேரையும் மீட்டு கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே நவின்குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.